கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி இடிந்தகரையில் கடந்த மாதம் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் கடந்த 7ந் தேதி தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவும், போராட்ட குழுவினரும் டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து மனு அளித்தனர். அதன் பிறகு இடிந்தரையில் 9 ந்தேதி நடைபெற இருந்த அடையாள உண்ணாவிரதத்துக்கு பதிலாக, விளக்க கூட்டம் நடைபெறும் போராட்ட குழு அமைப்பாளர் உதயகுமார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர், தமிழக முதல்வருக்கு கூடங்குளம் அணுமின்நிலைய பணிகள் திட்டமிட்டபடி தாமதமின்றி நடைபெற தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் எனகேட்டு கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. இதனால் போராட்ட குழுவினர் அதிருப்தி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இடிந்தகரையில் கடந்த 9 ந்தேதி போராட்டக்குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போராட்டக்குழுவினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்தனர். அதன்படி மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
நேற்று 4 வது நாளாக 22 பெண்கள் உள்பட 106 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அணுமின்நிலைய பணிக்கு சென்றவர்களை கூடங்குளம் பொதுமக்கள் திரண்டு நின்று முற்றுகையிட்டு பணிக்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்நிலையில் கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு வேலைக்கு சென்ற ஊழியர்களை பொதுமக்கள் இன்றும் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். இதனால் கூடங்குளத்ததில் இன்றும் பரபரப்புஏற்பட்டது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணு விஜய்நகரில் இருந்து, கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்கள் பஸ்களில் இன்று காலை வேலைக்கு புறப்பட்டு வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த பஸ்களை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கூடங்குளம் போலீஸ் நிலையம் அருகே வைத்து வழிமறித்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக