வியாழன், 13 அக்டோபர், 2011

ஜெயலலிதாவிடம் திரும்பிய கூடங்குளம் விவகாரம்!


கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக நடந்து​வரும் மக்கள் போராட்டம், அதன் இறுதிக் கட்டத்தைத் தொட்டேவிட்டது. ஜெயலலிதா எடுத்த முயற்சியின் பயனாக, கடந்த 6-ம் தேதி தமிழக அரசின் சார்பில் ஓ.பன்னீர்செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி.தங்கபாலு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க. எம்.பி-க்கள் தம்பிதுரை, வா.மைத்ரேயன், பி.ஜே.பி. நிர்வாகி சரவணப் பெருமாள் மற்றும்
போராட்டக் குழுவின் சார்பில் சுப.உதயகுமாரன் தலைமையில் வழக்​கறிஞர் சிவசுப்பிரமணியன், கடலோர மக்கள் கூட்டமைப்பின் தலைவர் புஷ்பராயன், தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் இவோன் ஆம்புரோஸ், மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆண்டன் கோமஸ் ஆகியோர் பிரதமரைச் சந்தித்தனர்.
பிரதமர் அலுவலகத்தில் நிகழ்ந்த பேச்சுவார்த்தை குறித்து சுப.உதயகுமாரன், ''நாங்கள் ஒரு குழுவாக இருந்தாலும், இரண்டு பிரிவுகளாகத்தான் பிரிந்து நின்றோம்...'' என்று பெருமூச்சுவிட்டபடி தொடர்ந்தார்.
''பிரதமர் வீட்டில் இருந்தே அணு சக்தித் துறையைச் சேர்ந்த ஸ்ரீகுமார் பானர்ஜி, எஸ்.கே.ஜெயின், தேசியப் பாதுகாப்பு அறிவுறுத்துனர் சிவசங்கர் மேனன் ஆகியோர் பிரதமருடன் சேர்ந்து வந்தார்கள். இந்தப் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வருவதற்கான எந்த அவசியமும் இல்லை என்றாலும் வந்திருந்தார்கள்.
ஆரம்பத்தில், 'நம் நாட்டில் இருக்கும் அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானவை’ என்று சொன்னபிரதமர், எங்கள் கருத்துகளைக் கேட்டு முகம் சிவந்தார். '2008-ம் ஆண்டு ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் போடப் பட்டது. அதில் இந்தியா ஏற்படுத்தி இருக்கும் அணு விபத்து இழப்பீட்டுச் சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது என்று ரஷ்யா கூறி இருக்கிறதே... அது எப்படி?’ என்று கேட்டதற்கு பிரதமர் பதில் சொல்லவில்லை. 'இந்த ரஷ்யத் தொழில்நுட்பம், தோல்வியடைந்த தொழில்நுட்பம் என்று சொல்லி 25 குறைபாடுகளை ரஷ்யாவில் இருக்கும் ஓர் ஆய்வு நிறுவனமே சொல்லி இருக்கிறதே?’ என்று பல கேள்விகள் கேட்டோம். பிரதமரிடம் இருந்து பதிலே இல்லை...'' என்றார்.
அடுத்துப் பேசிய புஷ்பராயன், ''1988-ம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கும்போது மக்களிடம் கருத்துக் கேட்பது, சுற்றுச்சூழல் பற்றிய அறிக்கை சமர்ப்பிப்பது போன்ற எந்தத் தகவலையும் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று சட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். அதே போல, அப்போது இருந்த கடலோர ஒழுங்காற்று மண்டல அறிக்கையின்படி, முதல் இரண்டு உலைகளைக் கட்டினார்கள். தற்போது, மேலும் நான்கு உலைகளைக் கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். 2011-ம் வருடத்திய கடலோர ஒழுங்காற்று மண்டல அறிக்கையின்படிதான் இவர்கள் செயல்பட வேண்டும். அப்படிப் பார்த்தால், இந்த நான்கு உலைகளைக் கட்ட முடியாது. அதை மீறி இவர்கள் செயல்படு​கிறார்​கள்!'' என்று  சொன்​னார்.
'இந்தத் திட்டத்தை நிரந்தரமாக நிறுத்துங்கள்’ என்கிறார்கள் போராட்டக் குழுவினர். 'மக்களின் பயத்தைப் போக்கும் வரை, இந்தத் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்​துங்கள்’ என்கிறது தமிழக அரசு. இனி செய்ய வேண்டியது எல்லாம் மத்திய அரசின் கையில்... மாநில அரசு போட்ட தீர்மானத் துக்கு மரியாதை இல்லாத வகையில், இந்த சந்திப்பு நிகழ்ந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே 'இந்தத் திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என நம் முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் பிரதமர்.
முதல்வரின் அடுத்த மூவ் என்னவோ?
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பினரின் போராட்டத்தின்  பின்னணியில் அந்நிய சக்திகள் இருக்கலாம் என்றும் அந்த சக்திகள் கோடிக்கணக்கில் பணத்தை களம் இறக்கி இருப்பதாகவும், இந்திய அணு சக்தித் துறையினர் மத்தியப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து முதல் கட்ட விசாரணையைத் தொடங்கி இருப்பதாகப் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.  சுப.உதயகுமாரனிடம் கேட்டபோது, ''அணு சக்திக்கு எதிராகப் போராடும் அடித்தட்டு மக்களைக் கொச்சைப்படுத்தும் காரியம் இது. எங்கள் போராட்டத்துக்கான நிதி உள்ளூர் மக்களும் ஏழை மீனவர்களும் வழங்கிய கொடைதான். எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்...'' என்றார் காட்டமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக